ஊழியர்களுக்கு கார், பைக் பரிசளித்து அசத்திய சென்னை வியாபாரி
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசளித்து வியாபாரி அசத்தி இருக்கிறார்.
- மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் கார் என ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான பரிசுகளை ஊழியர்களுக்கு கொடுத்தார்.
தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகை காலத்தை ஒட்டி ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது வியாபாரம் செய்வோரின் பழக்கம். அந்த வகையில் சென்னையை சேர்ந்த சல்லானி ஜூவல்லரி மார்ட் கடை உரிமையாளர் ஊழியர்களுக்கு பரிசளிக்கும் வழக்கத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார்.
நகை கடை உரிமையாளரான ஜெயந்தி லால் சயந்தி தனது ஊழியரகளுக்கு ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை கொடுத்துள்ளார். இதில் எட்டு நான்கு சக்கர வாகனங்கள், மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் என மொத்தம் 18 இருசக்கர வாகனங்கள் அடங்கும். பரிசு வாகனங்களாக மாருதி சுசுகி ஸ்விப்ட், ஹோண்டா ஆக்டிவா 110 மற்றும் ஹோண்டா ஷைன் போன்ற மாடல்கள் வழங்கப்பட்டுள்ளன.
"அவர்களின் பணியை பாராட்டி, வாழ்க்கையில் சிறப்பு சேர்க்கும் வகையில் இதுபோன்ற பரிசு கொடுத்திருக்கிறோம். வியாபாரத்தின் அனைத்து காலக்கட்டத்திலும் அவர்கள் நாங்கள் லாபம் ஈட்ட உழைத்துள்ளனர். இவர்கள் ஊழியர்கள் மட்டுமில்லாது எங்களின் குடும்பத்தினர் ஆவர். இதன் காரணமாகவே எனது குடும்பத்தாருக்கு செய்வதை போன்றே, எதிர்பாராத பரிசுகளை வழங்க முடிவு செய்தேன்."
"இவ்வாறு பரிசு அளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொருத்தரும் இது போன்று அவர்களின் ஊழியருக்கு மதிப்பு கொடுத்து, அவர்களுக்கு பரிசளித்து மேலும் ஊக்கப்படுத்த வேண்டும்," என ஜெயந்தி லால் தெரிவித்து இருக்கிறார்.