ரூ. 1 கோடி கொடுத்து மஹிந்திரா XUV400 வாங்கிய நபர்
- மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலாக XUV400-ஐ அறிமுகம் செய்தது.
- விசேஷமாக உருவாக்கப்பட்ட மஹிந்திரா XUV400 ஏலம் அந்நிறுவனம் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்டது.
மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து XUV400 மாடல் அதிக பிரபலமாக உள்ளது. இந்தியாவில் XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி-யை அறிமுகம் செய்யும் போதே, விசேஷமாக டிசைன் செய்யப்பட்ட XUV400 ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என மஹிந்திரா அறிவித்தது. அதன்படி ஏலத்தில் விற்பனையாகும் தொகை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்றும் மஹிந்திரா அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் ஸ்பெஷல் எடிஷன் XUV400 மாடலை ஏலத்தில் ரூ. 1 கோடிக்கு விற்பனை செய்து இருக்கிறது. ரூ. 1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா XUV400 காரை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஐதராபாத்தை சேர்ந்த கருணாகர் குந்தவரம் என்பவரிடம் வழங்கினார். இவர் ஸ்பெஷல் எடிஷன் மஹிந்திரா XUV400 மாடலை ரூ. 1 கோடியே 75 ஆயிரத்திற்கு ஏலத்தில் வாங்கி இருக்கிறார்.
ஏலத்தில் கிடைக்கும் தொகை முழுவதும் பூமியின் வளர்ச்சி நிதிக்காக வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் எடிஷன் மஹிந்திரா XUV400 மாடல் மஹிந்திரா மூத்த டிசைன் பிரிவு அலுவலர் பிரதாப் போஸ் மற்றும் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ரிம்ஸிம் டடு இணைந்து உருவாக்கி உள்ளனர். இந்த ஸ்பெஷல் எடிஷன் XUV400 மாடல் "ரிம்ஸிம் டடு X போஸ்" எடிஷன் என அழைக்கப்படுகிறது.
இந்த கார் ஆர்க்டிக் புளூ பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. காரின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் டுவின் பீக் லோகோ காப்பர் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இந்த XUV400 மாடலின் சில பகுதிகளில் "ரிம்ஸிம் டடு X போஸ்" லோகோ இடம்பெற்று இருக்கிறது. ஸ்பெஷல் எடிஷன் தவிர மஹிந்திரா XUV400 முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காரின் விலை ரூ. 15 லட்சத்து 99 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா XUV400 மாடல்- எவரஸ்ட் வைட், ஆர்க்டிக் புளூ, நபோளி பிளாக், கேலக்ஸி கிரே மற்றும் இன்ஃபினிட்டி புளூ என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது. புதிய XUV400 மாடலை வாங்க இதுவரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.