ஒரே ஆண்டில் இத்தனை லட்சங்களா? அசத்திய ஸ்கோடா
- ஸ்கோடா நிறுவனம் கடந்த ஆண்டு முழுக்க வினியோகம் செய்த கார்களின் எண்ணிக்கையை வெளியிட்டு உள்ளது.
- ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடல் பற்றிய தகவலும் இதில் வெளியாகி இருக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் உலகம் முழுக்க சுமார் 7 லட்சத்து 31 ஆயிரத்து 300-க்கும் அதிக வாகனங்களை வினியோகம் செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. இது 2021 ஆண்டுடன் ஒப்பிடும் போது 16.7 சதவீதம் குறைவு ஆகும். 2021 ஆண்டில் மட்டும் ஸ்கோடா நிறுவனம் 8 லட்சத்து 78 ஆயிரத்து 200 யூனிட்களை வினியோகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி மற்றும் வினியோக பிரிவில் ஏற்பட்ட சிக்கல்களே வினியோகம் குறைந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. செமிகண்டக்டர் சிப் குறைபாடு, உக்ரைன் போர் விவகாரம், வினியோக சிக்கல்கள் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டு இருக்கும் நிலையற்ற சூழல் போன்ற காலக்கட்டத்திலும் ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் 127.7 சதவீத வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் 51 ஆயிரத்து 900 யூனிட்களை வினியோகம் செய்து இருந்தது. 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் 22 ஆயிரத்து 800 யூனிட்களை மட்டுமே வினியோகம் செய்து இருந்தது. சர்வதேச சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடலாக ஸ்கோடா ஆக்டேவியா உள்ளது.
உலகம் முழுக்க 1 லட்சத்து 41 ஆயிரம் ஆக்டேவியா யூனிட்களை ஸ்கோடா கடந்த ஆண்டு வினியோகம் செய்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்தோடா கமிக் மற்றும் கோடியக் மாடல்கள் அதிக விற்பனையை பதிவு செய்துள்ளன. சர்வதேச சந்தையில் ஆதிகத்தை அதிகப்படுத்தும் முயற்சியாக ஸ்கோடா நிறுவனம் விரைவில் வியட்நாம் சந்தையில் களமிறங்க இருக்கிறது.