ஓடும் கார் மேற்கூரையில் அமர்ந்து பட்டாசு வெடித்த இளைஞர்கள் - வைரலாகும் போலீஸ் ஆக்ஷன்
- இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
- தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு உண்டு கொண்டாடினர்.
தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பது வழக்கமான காரியம் தான். சில தினங்களுக்கு முன் இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், ஆமதாபாத்தில் இளைஞர்கள் வித்தியாசமாக பட்டாசு வெடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து காவல் துறை இந்த சம்பவத்திற்கு என்ன செய்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைதளங்களில் வைரல் ஆன வீடியோவில் இளைஞர்கள் ஓடிக் கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டு வானில் வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்கும் பரபர காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இது தவிர காரின் பக்கவாட்டு பகுதியில் ஜன்னலின் வெளியில் தொங்கிக் கொண்டு செல்கின்றனர்.
வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து ஆமதாபாத் காவல் துறை ஆபத்தான முறையில் நடந்து கொண்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டப்படி அவர்களை கைது செய்யவில்லை என்ற போதிலும், தவறு செய்த இளைஞர்களை பொது வெளியில் தோப்புக்கரணம் போட செய்தனர். மேலும் இளைஞர்கள் தோப்புக்கரணம் போடும் வீடியோ ஆமதாபாத் காவல் துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
பட்டாசுகள் சரியாக கையாளப்படவில்லை எனில் வெடி விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமானவை ஆகும். இவற்றை கொண்டு சாகசம் செய்வது தீ விபத்தை ஏற்படுத்துவதற்கு சமம் ஆகும். முன்னதாக பட்டாசு வெடித்து பலமுறை தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.