அசத்தல் அப்டேட்களுடன் 2023 பிஎம்டபிள்யூ X7 இந்தியாவில் அறிமுகம்
- பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2023 X7 கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷ்களில் கிடைக்கிறது.
- புதிய பிஎம்டபிள்யூ காரின் முன்பதிவு துவங்கிவிட்ட நிலையில், வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய X7 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் - X7 xடிரைவ்40i M ஸ்போர்ட் மற்றும் X7 xடிரைவ்40d ஸ்போர்ட் என இரண்டு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 கோடியே 22 லட்சம் மற்றும் ரூ. 1 கோடியே 24 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
2023 பிஎம்டபிள்யூ X7 xடிரைவ்40i M ஸ்போர்ட் மாடலில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 376 ஹெச்பி பவர், 520 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய X7 xடிரைவ்40d M ஸ்போர்ட் மாடலில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 335 ஹெச்பி பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இருவித என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் பிஎம்டபிள்யூ xடிரைவ் ஆல்-வீல் டிரைவ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் ஸ்கை லாஞ்ச் பானரோமிக் சன்ரூஃப், 14 நிறங்கள் அடங்கிய ஆம்பியண்ட் லைடிங், 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 14.9 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, நான்கு ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 16 ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.
காரின் வெளிப்புறம் பெரிய கிட்னி கிரில், க்ரோம் அக்செண்ட்கள், புதிய முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், 3D டெயில் லேம்ப்கள், புதிய இன்னர் கிராஃபிக்ஸ், ஸ்மோக்டு கிளாஸ் உள்ளது. புதிய X7 காரின் இரண்டு வேரியண்ட்களும் பிஎம்டபிள்யூ சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. வினியோகம் மார்ச் 2023 வாக்கில் துவங்க இருக்கிறது.