துறவறம் பூண்ட கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி- 'என் வாழ்க்கையே போராட்டக்களம்' என்கிறார்
- 5 ஆண்டுகளுக்கு முன்பாக, என் மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.
- தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் 10 ஆயிரம் பேருக்கு உடைகள் வழங்கி வருகிறேன்.
'பாய்ஸ்' படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர், புவனேஸ்வரி. அந்த படத்துக்கு பிறகு 'என்னவோ பிடிச்சிருக்கு', 'தலைநகரம்' போன்ற பல படங்களில் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். தமிழ் போலவே, தெலுங்கு படங்களிலும் கவர்ச்சி காட்டி அங்கும் ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்தார்.
பூனைக்கண் புவனேஸ்வரி என்றும் அழைக்கப்பட்ட இவர், சின்னத்திரையிலும் பல நாடகங்களில் நடித்தார். கவர்ச்சி நாயகியாக கொடிகட்டி பறந்த இவர், விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தொடர்ந்த வழக்கில் நிராபராதி என்று தீர்ப்பு பெற்றார். விடுதலையான பிறகும், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் திடீரென சினிமாவுக்கு ஓய்வு கொடுத்த புவனேஸ்வரி, தற்போது ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு துறவு பூண்டுள்ளார். கோவில் கோவிலாக சுற்றியும் வருகிறார். கோவில்கள் முன்பாக ஏழைகளுக்கு உணவும் வழங்கி வருகிறார்.
புவனேஸ்வரியின் இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம், துறவறம் பூண்டுகொள்ளும் அளவுக்கு அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பது குறித்து, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோவில் முன்பு அன்னதானம் வழங்கி கொண்டிருந்த அவரிடமே கேட்டோம். அப்போது புவனேஸ்வரி மனம் திறந்து பேசியதாவது:-
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தான் என் சொந்த ஊர். வறுமை, குடும்ப சூழல் காரணமாக சென்னைக்கு நடிக்க வந்தேன். கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்ததும் அப்படித்தான். ஆனால் அந்த கதாபாத்திரங்கள் எனக்கு புகழை கொடுத்தது. வாழ்க்கை நன்றாக சென்ற சமயம், காலத்தின் பிடியால் எதிர்பாராமல் சிக்கினேன். நான் நிரபராதி என்பதை போராடி நிரூபித்தேன். ஆனாலும் சமூகம் என்னை இன்னும் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்த்தார்கள். ஆனாலும் நான் என் வழியில் சென்றுகொண்டிருந்தேன்.
5 ஆண்டுகளுக்கு முன்பாக, என் மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதுவே என்னை ஆன்மிகத்துக்கு இழுத்தது. வாழ்க்கை என்பது குறுகிய கால பயணம். எனவே மீதி காலத்தை இறைப்பணிக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தேன். அந்தவகையில் என் உடலையும், மனதையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டேன். முழுமையான மனதுடன் துறவறத்தை ஏற்றுக்கொண்டேன். காசிக்கு சென்று சித்தியும் பெற்றுவிட்டேன்.
நான் செல்லாத கோவிலே கிடையாது என்ற வகையில் ஆன்மிக பயணங்கள் செல்கிறேன். தேவாலயங்கள், பள்ளிவாசல்களுக்கும் செல்கிறேன். என்னை பொறுத்தவரை என் ஆன்மிக பணிக்கு மதம் ஒரு தடை அல்ல. அதேவேளை சிறிய வயதில் வறுமை காரணமாக, நான் பசியில் அலைந்த நிலை பிறருக்கு வரக்கூடாது என்பதால், தினமும் ஏதாவது ஒரு ஆன்மிக தலத்துக்கு சென்று அங்கு ஏழை-எளியோருக்கு உணவளித்து வருகிறேன். அந்தவகையில் தினமும் 300 பேருக்கு சாப்பாடு கொடுத்து வருகிறேன்.
சென்னையில் எனக்கு சொந்தமான வீடுகளை படப்பிடிப்புக்காக வாடகைக்கு விட்டிருக்கிறேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் என் தேவைகளுக்கும், அன்னதானத்துக்கும் பயன்படுத்துகிறேன். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் 10 ஆயிரம் பேருக்கு உடைகள் வழங்கி வருகிறேன். சஷ்டிக்கு திருச்செந்தூர் சென்று விரதம் இருந்து, ஏழைகளுக்கு உதவி வருகிறேன். நான் யாரிடமும் உதவி கேட்கவில்லை. உதவி கொடுப்போரின் மனநிலையும் சரியானதாக இல்லை.
என் வாழ்க்கை மிகப்பெரிய போராட்டக்களம். என் குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். என் மீதான பார்வை இன்னும் மாறவில்லை என்றாலும், என் பணியை நான் கைவிடுவதாக இல்லை. ஒரு அரசியல் கட்சியிலும் மகளிரணி செயலாளராக இருக்கிறேன். எனக்கு 42 வயதாகிறது. இனி என் வாழ்நாள் முழுவதும் இறைப்பணிக்காகவே செலவிட இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பண்டரிபாய், காஞ்சனா வரிசையில் துறவறம் பூண்ட நடிகைகள் பட்டியலில் புவனேஸ்வரியும் சேர்ந்திருக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்