கிரிக்கெட் (Cricket)

இந்திய அணிக்காக பயணிகள் விமானத்தை திசைதிருப்புவதா?: ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்கும் அதிகாரிகள்

Published On 2024-07-04 09:10 GMT   |   Update On 2024-07-04 09:56 GMT
  • டி20 உலகக் கோப்பை தொடரில் கோப்பை வென்ற இந்திய அணி இன்று நாடு திரும்பியது.
  • உலகக் கோப்பையுடன் டெல்லி வந்தடைந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுடெல்லி:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. பார்படாசில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர். உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, வெஸ்ட் இண்டீசில் ஏற்பட்ட புயல் மழையால் உலகக் கோப்பை வென்ற இந்திய அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க்கில் இருந்து புதுடெல்லிக்கு இயக்க திட்டமிடப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்துசெய்யப்பட்டது.

அந்த பயணிகள் விமானம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை அழைத்துச் செல்ல பார்படாசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை விமானத்தில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மாற்று விமானம் எதுவும் வழங்கப்படவில்லை என பயணிகள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் விரிவான அறிக்கையை டிஜிசிஏ கோரியுள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News