கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலியா ஆர்வம்: 4-வது போட்டி நாளை தொடக்கம்

Published On 2023-07-18 12:23 GMT   |   Update On 2023-07-18 12:23 GMT
  • பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
  • கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது.

மான்செஸ்டர்:

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், லார்ட்சில் நடந்த 2-வது போட்டியில் 43 ரன் வித்தியாசத்திலும் வெற்றியை ருசித்தது.

லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3-வது போட்டியில் இங்கிலாந்துக்கு (3 விக்கெட்) வெற்றி கிடைத்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை (19-ந்தேதி) தொடங்குகிறது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் கடந்த டெஸ்டை போலவே இந்தப் போட்டியிலும் சிறப்பாக விளையாட முயற்சிக்கும்.

இந்த டெஸ்டுக்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆலி ராபின்சன் நீக்கப்பட்டு உள்ளார்.

கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. ஆஷஸ் தொடரின் ரன் குவிப்பில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா (356 ரன்) முதல் இடத்திலும், இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் (309 ரன்) 2-வது இடத்திலும் உள்ளார். பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராட் 16 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 15 விக்கெட் சாய்த்துள்ளார்.

Tags:    

Similar News