டி20 கிரிக்கெட்: 11 பந்தில் அரைசதம் அடித்து ரெயில்வே வீரர் சாதனை
- முதலில் பேட் செய்த ரெயில்வே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் குவித்தது.
- இதனையடுத்து விளையாடிய அருணாச்சலபிரதேச அணி 18.1 ஓவர்களில் 119 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
ராஞ்சி:
16-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை, மொகாலி, ஜெய்ப்பூர், ராஞ்சி உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ராஞ்சியில் நேற்று நடந்த 'சி' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ரெயில்வே-அருணாச்சலபிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ரெயில்வே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உபேந்திர யாதவ் ஆட்டம் இழக்காமல் 103 ரன்னும், அசுதோஷ் ஷர்மா 53 ரன்னும் (12 பந்து, ஒரு பவுண்டரி, 8 சிக்சர்) நொறுக்கினர்.
அசுதோஷ் ஷர்மா 11 பந்துகளில் அரைசதத்தை எட்டி சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் (சர்வதேச மற்றும் உள்ளூர் 20 ஓவர் போட்டி) அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை யுவராஜ்சிங்கிடம் இருந்து தட்டிப்பறித்தார். 2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் யுவராஜ்சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
ஒட்டுமொத்த அளவில் கடந்த மாதம் நடந்த ஆசிய விளையாட்டில் மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நேபாள வீரர் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதம் அடித்ததே உலக சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஆடிய அருணாச்சலபிரதேச அணி 18.1 ஓவர்களில் 119 ரன்னில் அடங்கியது. இதனால் ரெயில்வே அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.