தெறிக்கவிட்ட சூரியகுமார் யாதவ்... ஹாங்காங் அணிக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
- விராட் கோலி நடப்பு ஆசிய கோப்பை தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
- சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அரை சதம் கடந்தார்.
துபாய்:
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று, துபாயில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கே.எல்.ராகுல், விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தது. ராகுல் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் பந்துகளை பவுண்டரிகளாக பறக்க விட்டு, ஹாங்காங் பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.
விராட் கோலி இந்த தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். 40 பந்துகளில் ஒரு பவுண்டரி 2 சிக்சர்களுடன் இந்த இலக்கை அவர் எட்டினார். சர்வதேச டி20 போட்டிகளில் அவருக்கு இது 31வது அரை சதமாகும். மறுமுனையில் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ், கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அரை சதம் கடந்தார்.
மிக குறைந்த பந்துகளில் அதாவது 22 பந்துகளில் அரைசதம் அடித்து ஆச்சரியப்படுத்திய சூர்யகுமார் யாதவ், அடுத்த பந்திலும் சிக்சர் அடித்து, ஹாட்ரிக் சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 5வது பந்திலும் ஒரு இமாலய சிக்சரை பறக்கவிட்டார். கடைசி ஓவரில் மட்டும் அவர் 6 சிக்சர் உள்பட 26 ரன்கள் விளாசினார்.
20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. விராட் கோலி 59 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்குகிறது.