சச்சின் மொத்தமா 100 சதம்.. கோலி ODI-யில் மட்டுமே 100 சதம் அடிப்பாரு- பாக். முன்னாள் வீரர் நம்பிக்கை
- விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் எடுப்பதில் விராட்கோலி எப்போதும் சிறந்தவராக இருக்கிறார்.
- அவர் தனது உடல் தகுதி விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் பணி செய்கிறார்.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட்கோலி, லோகேஷ் ராகுல் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்தனர்.
122 ரன்கள் குவித்ததன் மூலம் விராட்கோலி ஒருநாள் போட்டியில் 47-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் டெண்டுல்கரை அவர் நெருங்கியுள்ளார். டெண்டுல்கர் 463 போட்டிகளில் விளையாடி 49 சதங்கள் அடித்துள்ளார். அவரது சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 3 செஞ்சூரி தேவை.
மேலும் விராட்கோலி 13 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்து டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். கோலி 267 இன்னிங்சில் 13 ஆயிரம் ரன்னை தொட்டார். டெண்டுல்கர் 321 இன்னிங்சில்தான் இந்த ரன்னை எடுத்தார்.
சர்வதேச போட்டிகளில் விராட்கோலி 77 செஞ்சூரி அடித்து (டெஸ்ட் 29 + ஒருநாள் போட்டி 47 + 20 ஓவர் 1) 2-வது இடத்தில் உள்ளார். டெண்டுல்கர் 100 சதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதோடு மட்டுமல்லாமல் விராட்கோலி ஒருநாள் போட்டிகளில் 100 சதங்களை அடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் வாக்கர் யூனுஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விராட்கோலிக்கும், மற்ற வீரர்களுக்கு இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்கையை முடிக்கும் போது ஒருநாள் போட்டியில் 49 சதங்கள் அடித்து இருந்தார். விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிப்பதற்கு நீண்ட காலம் இருக்கிறது. அவர் டெண்டுல்கரின் சாதனையை எளிதில் கடப்பார். நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அவர் 100 சதங்கள் அடிப்பார்.
விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் எடுப்பதில் விராட்கோலி எப்போதும் சிறந்தவராக இருக்கிறார். அவர் தனது உடல் தகுதி விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் பணி செய்கிறார்.
இவ்வாறு வாக்கர் யூனுஸ் கூறியுள்ளார்.