டிராவிஸ் ஹெட் சதம்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப் 5 விக்கெட் வீழ்த்தினார்.
அடிலெய்டு:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று அடிலெய்டுவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 62.1 ஓவரில் 188 ரன்னில் சுருண்டது. மெக்கன்சி அரை சதம் அடித்தார். ஷமர் ஜோசப் 36 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய சார்பில் கேப்டன் கம்மின்ஸ், ஹசில்வுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள்.
அதன்பின், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடர்ந்தது ஆடியது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 30 ரன்னிலும், க்ரீன் 6 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. கவாஜா 45 ரன்னில் அவுட்டானார். க்ரீன் 14 ரன்னில் வெளியேறினார்.
பொறுப்புடன் ஆடிய டிராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தினார். அவர் 119 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டும், ரோச், கிரீவ்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 95 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.