சிக்சர், பவுண்டரி மழை பொழிந்த வீரர்கள் - 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 399 ரன்கள் குவிப்பு
- முதலில் ஆடிய இந்திய அணி 399 ரன்களை குவித்தது.
- சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி அதிரடியாக ஆடி 200 ரன்கள் சேர்த்தனர்.
இந்தூர்:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 16 ஆக இருக்கும்போது ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் சுப்மன் கில்லுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணி 9.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடியைப் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர் திணறினர். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் சதமடித்து அசத்தினர். ஷ்ரேயஸ் அய்யர் 86 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட சதமடித்தார். அவர் 105 ரன்னில் அவுட்டானார். இது இவரது 3வது ஒருநாள் சதமாகும்.
சுப்மன் கில் 92 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 200 ரன்கள் குவித்தனர். இஷான் கிஷன் 31 ரன்னில் வெளியேறினார்.
தொடர்ந்து ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஜோடியில் சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர். ராகுல் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.
கேமரூன் கிரீன் வீசிய 43-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 4 சிக்சர்கள் அடித்து அசத்தினார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.