கிரிக்கெட் (Cricket)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 386 ரன்கள் குவிப்பு

Published On 2022-12-27 08:29 GMT   |   Update On 2022-12-27 08:29 GMT
  • ஸ்மித் சதத்தை நெருங்கிய வேளையில் 85 ரன்னில் அவுட் ஆனார்.
  • 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்தார்.

மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் தென்ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 68.4 ஓவர்களில் 189 ரன்னில் சுருண்டது.

அந்த அணி தரப்பில் வெரைன் 52 ரன், ஜேன்சன் 59 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் கிரீன் 10.4 ஓவர்கள் பந்து வீசி 3 மெய்டனுடன் 27 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 45 ரன் எடுத்திருந்தது. வார்னர் 32 ரன்னுடனும், லபுஸ்சேன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து ஆடிய லபுஸ்சேன் 14 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் ரன் சேகரிப்பில் கவனம் செலுத்தினர். நிதானமான ஆடிய வார்னர் முதலில் சதத்தை பதிவு செய்தார். இதற்கிடையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் சதத்தை நெருங்கிய வேளையில் 85 ரன்னில் அவுட் ஆனார்.

தனது சதத்தை அடித்த பின்னர் அதிரடி காட்டிய டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய வார்னர் அதில் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்தார். 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்தார். இதற்கு முன் ஜோ ரூட் இந்த சாதனையை படைத்துள்ளர். இரட்டை சதம் அடித்த பின் வார்னர் காயம் காரணமாக 'ரிட்டயர்ட் ஹர்ட்' மூலம் வெளியேறினார்.

அவர் 254 பந்தில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 200 ரன்கள் குவித்தார். இதற்கடுத்து களம் இறங்கிய க்ரீன் 6 ரன்னில் காயம் காரணமாக வெளியேறினார். இதையடுத்து டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் ஹேரி ஜோடி மேற்கொண்டு ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

இறுதியில் அந்த அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இதுவரை 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணி தரப்பில் ஹெட் 48 ரன்னுடனும், ஹேரி 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News