முக்கியமான போட்டியில் ரிஷப் பண்டிற்கு தடை: பொறுப்பு கேப்டனை நியமித்தது டெல்லி
- ஆர்சிபி அணிக்கு எதிரான நாளைய போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
- முக்கியமான போட்டியில் ரிஷப் பந்த் விளையாடாமல் இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 62-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்த போட்டி இரு அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மிகவும் மிக்கியமான போட்டி என்பதால் வெற்றிகாக இரு அணிகளும் கடுமையாக போராடுவார்கள்.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு நாளை நடைபெறும் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாளைய போட்டியில் யார் அணியை வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் நாளைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை நட்சத்திர ஆல் ரவுண்டர் அக்சர் படேல் வழிநடத்துவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான போட்டியில் ரிஷப் பந்த் விளையாடாமல் இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.