அரை சதம் விளாசிய ஷகிப் அல் ஹசன்- நெதர்லாந்துக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்
- அதிரடியாக விளையாடிய ஷகிப் அல் ஹசன் அரை சதம் அடித்தார்.
- நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி தொடக்க வீரர்களாக தன்ஸித் ஹசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ களமிறங்கினர். இதில் நஜ்முல் சாண்டோ ஒரு ரன்னிலும் அடுத்து வந்த லிட்டன் தாஸ்சும் ஒரு ரன்னுடம் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனையடுத்து தன்சித் ஹசன் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை உயர்த்தினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி பவுண்டரியும், சிக்சர்களையும் பறக்கவிட்டனர். இதன்மூலம் வங்கதேச அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களைக் குவித்தது.
சிறப்பாக விளையாடிய தன்சித் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டவ்ஹித் ஹ்ரிடோய் 9 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ஷாகிப் அல் ஹசன் மற்றும் மஹ்முதுல்லாஹ் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய மஹ்முதுல்லாஹ் 25 ரன்னில் வெளியேறினார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல் ஹசன் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷகிப் 64 ரன்கள் எடுத்தார். இதனால் வங்காளதேசம் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.