4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்தது வங்காளதேசம்
- வங்காளதேசம் முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் குவித்தது.
- இந்திய தரப்பில் அக்ஷர் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
thaசட்டோகிராம்:
இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடை பெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 404 ரன் குவித்தது. வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், உமேஷ்யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 254 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதனால் வங்காள தேசத்துக்கு 513 ரன் இலக்காக இருந்தது. தொடக்க வீரர் சுப்மன் கில்லும் (110 ரன்), புஜாரா வும் (102 ரன்) சதம் அடித்தனர். 513 ரன் எடுத்தால் வெற்றி கடினமான இலக்குடன் ஆடிய வங்காள தேசம் நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்து இருந்தது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடந்தது.
வங்காள தேசம் அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் நஜிமுல் உசேன், ஜாகிர் உசேன் நிதானமாக ஆடினார்கள். இருவரும் அரை சதம் அடித்து இந்திய பந்து வீச்சை திணறடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் குவித்தது.
இந்த ஜோடியை உமேஷ் யாதவ் பிரித்தார். அடுத்து வந்த யாசீர் அலி 5 ரன்னிலும் தாஸ் 19 ரன்னிலும் ரஹிம் 23 ரன்னிலும் யாசர் 3 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் அணி 6 விக்கெட்டை இழந்து 272 ரன்கள் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அக்ஷர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நாளை கடைசி நாள் இந்திய வெற்றி பெற 4 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.