மகளிர் ஆசிய கோப்பை: மலேசியா அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்
- வங்காளதேசம் தரப்பில் முர்ஷிதா 80 ரன்கள் விளாசினார்.
- மலேசியா அணி தரப்பில் மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில், எல்சா ஹண்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம் - மலேசியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க வீரர்களாக திலாரா அக்டர்- முர்ஷிதா காதுன் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். 33 ரன்கள் எடுத்த நிலையில் திலாரா அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் நிகர் சுல்தானா, முர்ஷிதாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து விளையாடிய இருவரும் அரை சதம் விளாசினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட முர்ஷிதா 80 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் வங்காளதேசம் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ரன்கள் குவித்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சுல்தானா 62 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
மலேசியா அணி தரப்பில் மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில், எல்சா ஹண்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.