கிரிக்கெட் (Cricket)

வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: தனஞ்ஜெயா டி சில்வா, மெண்டிஸ் சதம்- இலங்கை 280-ல் ஆல்அவுட்

Published On 2024-03-22 10:55 GMT   |   Update On 2024-03-22 10:55 GMT
  • இலங்கை அணி 57 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.
  • கமிந்து மெண்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோர் தலா 102 ரன்கள் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இலங்கை அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை சியால்ஹெட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இலங்கை அணி முதலில் களம் இறங்கியது. வங்காளதேச அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நிஷான் மதுஷ்கா (2), திமுத் கருணாரத்னே (17), குசால் மெண்டிஸ் (16), மேத்யூஸ் (5), சண்டிமல் (9) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் இலங்கை 57 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது திணறியது. 6-வது விக்கெட்டுக்கு கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா உடன் கமிந்து மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டது.

இருவரும் அபாரமாக விளையாடி சதம் விளாசினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. கமிந்து மெண்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோர் தலா 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த ஜெயசூர்யா (1), விஷ்வா பெர்னாண்டோ (9), லஹிரு குமாரா (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை முதல் இன்னிங்சில் 68 ஓவரில் 280 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வங்காளதேச அணி சார்பில் காலித் அகமது, நஹித் ராணா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

Tags:    

Similar News