ஆடுகளம் மதிப்பீடு... ஐசிசி போட்டி நடுவர்களை விளாசிய ரோகித் சர்மா
- முதல் பந்தில் இருந்து சீம் என்றால்... ஓகே.
- அதேநேரம் முதல் பந்தில் இருந்து டர்னிங் என்றால், அவர்கள் அதை விரும்புவது இல்லை.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. அந்த அணி இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 55 ரன்னில் சுருண்டது. பின்னர் இந்தியா 153 ரன்னில் சுருண்டது.
முதல் நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்ந்தன. 2-வது நாளுடன் போட்டி முடிவடைந்து இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த பந்துகள் வீசப்பட்ட நிலையில் முடிவடைந்த டெஸ்ட் போட்டி இதுதான். ஐந்து செசன்களை கூட தாண்டவில்லை.
ஆடுகளம் ஸ்விங், பவுன்ஸ், கேரி, எக்ஸ்ட்ரா பவுன்ஸ் என அமர்க்களப் படுத்தியது. பேட்ஸ்மேன்கள் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது. பந்து எப்படி வரும் என்று கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருந்த போதிலும் இந்திய வீரர்கள் ஆடுகளம் குறித்து புகார் அளிக்கவில்லை.
இந்தியா SENA என அழைக்கப்படும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சென்று விளையாடும்போது பேட்ஸ்மேன்கள் சற்று திணறத்தான் செய்வார்கள். இந்த நான்கு நாடுகளிலும் அவர்களுக்கு சாதகமான வகையில் ஆடுகளத்தை தயார் செய்வார்கள்.
ஆனால், இந்தியாவில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்யும்போது வெளிநாட்டு வீரர்கள் ஆடுகளம் முதல் நாளில் இருந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவகையில் திரும்புகிறது புகார் அளிப்பார்கள். போட்டி நடுவர்களும் ஆடுகளம் குறித்து புகார் அளித்து ஐசிசி மதிப்பீடு செய்யும்.
இந்த நிலையில்தான் போட்டி முடிந்த பிறகு, ஆடுகளத்தை நேரடியாக குறை கூறாத ரோகித் சர்மா, ஐசிசி நடுவர்கள் நடுநிலையாக செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-
நீங்கள் இங்கே (தென்ஆப்பிரிக்கா) டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வரும்போது, டெஸ்ட் கிரிக்கெட்தான் உச்சக்கட்டமானது, அற்புதமானது என்று பேசுகிறீர்கள். அப்படி பேசுபவர்கள் அது நிலையில் இருக்க வேண்டும்.
அதுபோன்ற ஒரு சவால் வரும்போது நீங்கள் அதை எதிர்கொள்ள வேண்டும். இந்தியாவில் முதல் நாளில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் திரும்பும் வகையில் செயல்படும்போது புழுதி கிளம்புகிறது, புழுதி கிளம்புகிறது என பேசுகிறார்கள். ஆடுகளத்தில் ஏராளமான வெடிப்புகள் (Crack) உள்ளது என்கிறார்கள்.
நீங்கள் எங்கே சென்றாலும் அதே நடுநிலையுடன் செல்ல வேண்டும். சில போட்டி நடுவர்கள், ஆடுகளத்தை முறையாக ஆய்வு செய்து மதிப்பிட வேண்டும்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற ஆடுகளம், சராசரிக்கு கீழ் என கணக்கிடப்பட்டுள்ளது. அதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன் சதம் அடித்துள்ளார். அப்படியிருக்கும்போது எப்படி மோசமான ஆடுகளம் ஆகும்?.
ஆகவே, ஐசிசி மற்றும் நடுவர்கள் இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆடுகளத்தை போட்டி நடத்தும் நாட்டை பார்க்காமல், நீங்கள் எதை பார்க்கிறீர்கள் அதைவைத்து மதிப்பிடுங்கள். அவர்கள் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக்கொண்டு அந்த அம்சங்களைப் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.
இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடுவதில் பெருமை கொள்கிறோம், நடுநிலையாக இருக்க வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன்.
ஆடுகளம் எப்படி மத்திப்பிடப்படுகிறது என்பதை பார்க்க விரும்புகிறேன். மும்பை, பெங்களூரு, கேப் டவுன், செஞ்சூரியன் உள்ளிட்ட அனைத்து ஆடுகளங்களும் வித்தியாசமானவை. ஆடுகளங்கள் விரைவாக மோசமடையும். சூழ்நிலைகள் மாறுபட்டவை.
முதல் பந்தில் இருந்து பந்து சீம் என்றால்... ஓகே. அதேநேரம் முதல் பந்தில் இருந்து டர்னிங் என்றால், அவர்கள் அதை விரும்புவது இல்லை. பந்து சீம் ஆனால் ஓகே. டர்ன் (சுழற்பந்து வீச்சு திரும்பினால்) ஆனால் ஓகே இல்லை என்றால், அது தவறானது.
போட்டி நடுவர்கள் இந்த மதிப்பீடுகளை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை நான் போதுமான அளவு பார்த்திருக்கிறேன், அவர்கள் எப்படி கவனிக்க விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.