கிரிக்கெட்

சிக்ஸ் அடிச்சா அவுட்.. Street கிரிக்கெட்டை மிஞ்சிய கிரிக்கெட் கிளப்பின் விசித்திர விதிமுறை

Published On 2024-07-24 04:14 GMT   |   Update On 2024-07-24 04:51 GMT
  • சிக்ஸ் அடித்தால் அவுட் என ஏகப்பட்ட விதிமுறைகள் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் உள்ளது.
  • கிரிக்கெட்டில் சிக்ஸ் அடிப்பது பெருமைக்குரிய விஷயம்.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு மிக பிரபலமானது. இங்கு கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுபவர்களை விட தெருக்களில் கிரிக்கெட் விளையாடுபவர்களே அதிகம்.

ஸ்ட்ரீட் கிரிக்கெட் என அழைக்கப்படும் இந்த விளையாட்டை இந்தியாவில் விளையாடாதவர்களே கிடையாது என்றே சொல்லலாம். குடியிருப்பு பகுதிகளில் வீடுகள் அதிகம் உள்ள இடங்களில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடப்படுவதால் கிரிக்கெட்டை விட இங்கு விதிமுறைகள் ஏராளம்.

3 பந்துகளை தொடர்ச்சியாக விட்டால் அவுட். ஒன் பிட்ச் கேட்ச் அவுட் என ஏகப்பட்ட விதிமுறைகள் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் உள்ளது.

ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் சிக்ஸ் அடித்தால் அருகில் உள்ள வீடுகளின் ஜன்னல்களை பந்துகள் சேதப்படுத்தும். அதனால் சிக்ஸ் அடித்தால் அவுட் எனும் விதிமுறை ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ட்ரீட் கிரிக்கெட்டின் முக்கிய விதிமுறையான சிக்ஸ் அடித்தால் அவுட் என விதிமுறையை பிரபல கிரிக்கெட் கிளப் விதித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தின் 234 ஆண்டுகள் பழமைவாய்ந்த உள்ளூர் கிரிக்கெட் கிளப்பான சௌத்விக் அண்ட் ஷோரேஹம் கிளப்பில், வீரர்கள் சிக்சர்கள் விளாச தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல் சிக்சர் அடித்தால் ரன் இல்லை எனவும் 2வது சிக்சர் அடித்தால் அவுட் என புதிய விதிமுறை அந்த கிளப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வீரர்கள் சிக்சர்கள் விளாசுவதால் மைதானத்திற்கு அருகே உள்ள தங்கள் வீடுகளில் அடிக்கடி சேதம் ஏற்படுவதாக அக்கம் பக்கத்தினர் தொடர்ச்சியாக புகாரளித்து வருவதால் இந்த முடிவு என அந்த கிளப் விளக்கம் அளித்துள்ளது.

அதே சமயம் சிக்ஸ் அடிக்க தடை விதிக்கப்பட்டதற்கு கிளப்பில் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிரிக்கெட்டில் சிக்ஸ் அடிப்பது பெருமைக்குரிய விஷயம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News