இந்தியா- பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்: காய் நகர்த்தும் ஆஸ்திரேலியா
- இந்தியா- பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் 2012-13-க்குப் பிறகு நடைபெறவில்லை.
- நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக இருக்கும். இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடருக்கு இணையாக இந்தத் தொடர் பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல போட்டியை நடத்தும் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் சிறந்ததாக இருக்கும்.
ஆனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக இந்தியா தொடர்ந்த குற்றம்சாட்டியது. மேலும், எல்லையில் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரையில் இருநாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் கிடையாது என இந்தியா தெரிவித்தது.
இதன்காரணமாக 2012-13-க்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடத்தப்படவில்லை. உலகக் கோப்பை, ஆசிய கோப்பை போன்ற ஐசிசி தொடர்பான தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதிக் கொள்கின்றன.
இந்த நிலையில் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் சம்மதம் தெரிவித்தால், நாங்கள் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்த தயாராக இருக்கிறோம் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டின் சிஇஓ தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு காரணமும் உள்ளது. ஏனென்றால் இந்த மாதம் நவம்பர் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆஸ்திரேலியா செல்கின்றன. இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் நவம்பர் 22-ந்தேதி தொடங்குகிறது. அதேவேளையில் பாகிஸ்தான் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.
அப்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான தொடரை நடத்திவிடலாம் என ஆஸ்திரேலியா விரும்புகிறது. 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை 90,293 ரசிகர்கள் போட்டியை கண்டு ரசித்தனர்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் சிஇஓ நிக் ஹாக்லி
மீண்டும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற்றால் நிதி ரீதியாக சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என விக்டோரியா அரசும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. விக்டோரியாவில்தான் மெல்போர்ன் மைதானம் உள்ளது.
நாங்கள் பாகிஸ்தானுக்காக இந்த போட்டியை நடத்துவதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவுக்காக போட்டியை நடத்துவதிலும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களால் உதவ முடியும் என்றால் அது சிறப்பானது. ஆனால், இது இரு நாடுகளுக்கு இடையிலான தொடர். இது மற்றவர்களுக்காகத்தான் (இந்தியா அல்லது பாகிஸ்தான்) நடத்தப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் சிஇஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.