உடனுக்குடன் கோபம் அடைவது ஏற்றுக் கொள்ள முடியாது- ஹர்மன்பிரீத் கவுரை சாடிய முன்னாள் கேப்டன்
- இந்திய கேப்டனின் செயல்பாடுகள் ஏற்கத்தக்க ஒன்றாக இல்லை.
- அவர் நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது.
வங்கதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் செயல் கிரிக்கெட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அவுட் ஆனதும், கோபத்தில் ஸ்டம்புகளை பேட்-ஆல் அடித்து அம்பயர்களை கடுமையாக சாடினார்.
இதனை சமூக வலைதளங்களில் சரி என்று ஒருதருப்பும், தவறு என்று மறு தரப்பும் மாறி மாறி கருத்துக்களை பரிமாறி வருகிறது.
இந்நிலையில் உடனுக்குடன் கோபம் அடைவது ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் இந்திய மகளிர் அணியின் கேப்டன் டியானா எடுல்ஜி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய கேப்டனின் செயல்பாடுகள் ஏற்கத்தக்க ஒன்றாக இல்லை. அவர் நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. நீங்கள் தான் கேப்டன். நீங்கள் தான் அணியை வழிநடத்தி சென்று, அடுத்து வர இருக்கும் ஜூனியர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். அவர்கள் உங்களின் நடத்தையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களும் இதே போன்ற செயல்பட வாய்ப்புகள் உண்டு.
உடனுக்குடன் கோபம் அடைவது ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் ஐ.சி.சி. விதிகளின் கீழ் விளையாடி வருகின்றீர்கள். அதிர்ஷ்டவசமாக அது சீரிசின் கடைசி போட்டியாக அமைந்தது. பி.சி.சி.ஐ. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். முதலில் 90 முதல் 100 சதவீதம் வரை போட்டிக்கு பங்களிப்பை கொடுங்கள். போட்டிகளில் வெற்றி பெற்றாலே, அளவுக்கு அதிகமாகவே நட்சத்திர அந்தஸ்து தானாக கிடைத்து விடும்.
எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் அம்பயரிங் போட்டியின் ஒருபங்கு மட்டும் தான். சில சமயங்களில் அது சாதகமாக இருக்கும், சில சமயங்களில் அது இருக்காது. ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.