கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி தோல்வி

Published On 2023-12-07 06:44 GMT   |   Update On 2023-12-07 06:44 GMT
  • 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய இந்திய அணியால் 6 விக்கெட்டுக்கு 159 ரன்களே எடுக்க முடிந்தது.
  • இங்கிலாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை:

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ரேணுகா சிங்கின் முதல் ஓவரிலேயே சோபியா டங்லி (1 ரன்) அலிஸ் கேப்சி (0) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தாலும் டேனி வியாட், நாட் சிவர் இருவரும் கூட்டணி போட்டு அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஸ்கோரை அதிரடியாக உயர்த்திய இவர்களில் டேனி வியாட் 75 ரன்களிலும் (47 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), நாட் சிவர் 77 ரன்களிலும் (53 பந்து, 13 பவுண்டரி) ஆட்டமிழந்தனர்.

20 ஓவர் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 197 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட்டும், ஸ்ரேயங்கா பட்டீல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிர்தி மந்தனா (6 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (4 ரன்) ஏமாற்றம் அளித்தனர். 3-வது விக்கெட்டுக்கு ஷபாலி வர்மாவும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் ஜோடி சேர்ந்து களத்தில் நின்றது வரை வெற்றி வாய்ப்பு தென்பட்டது. ஸ்கோர் 82-ஐ எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தும் ஆட்டத்தின் போக்கு மாறியது. ஹர்மன்பிரீத் 26 ரன்னிலும், ஷபாலி வர்மா 52 ரன்னிலும் (42 பந்து, 9 பவுண்டரி) சோபி எக்லெஸ்டனின் சுழலில் சிக்கினர். அதன் பிறகு இலக்கை நெருங்க கூட முடியவில்லை.

20 ஓவர்கள் முழுமையாக ஆடிய இந்திய அணியால் 6 விக்கெட்டுக்கு 159 ரன்களே எடுக்க முடிந்தது. எக்ஸ்டிரா வகையில் 20 வைடு உள்பட 21 ரன்கள் கிடைத்தது. இதன் மூலம் இங்கிலாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சோபி எக்லெஸ்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

3 போட்டி கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.

Tags:    

Similar News