என்ன கொடுமை சார் இது.. ஷூவால் விக்கெட்டை இழந்த டேவிட் வார்னர்- வைரலாகும் வீடியோ
- இந்த போட்டியில் அவர் 56 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்தார்.
- தென்ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் முன்னணி வீரரான எய்டன் மார்க்கம் 102 ரன்களையும், துவக்க வீரர் டி காக் 82 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 339 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 34.3 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் அவுட் ஆன விதம் அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் 78 ரன்கள் அடித்திருந்த நிலையில் ரன் ஓடும்போது தனது காலில் இருந்த ஷூ நழுவியதால் தடுமாறி கீழே விழுந்து மீண்டும் எதிர் முனையில் உள்ள கிரீசை தொட முடியாமல் ரன் அவுட்டாகி பரிதாபமான முறையில் வெளியேறினார்.
இந்த போட்டியில் அவர் 56 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.
அவர் ஆட்டமிழந்த வீடியோ கூட தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு டேவிட் வார்னர் ஆட்டமிழந்ததும் நல்ல நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணி இறுதியில் தோல்வியையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.