5 ஆண்டுகள் கேப்டன்சி, கூடவே பிளாங்க் செக்... SRH-இல் இணைகிறாரா ரோகித் சர்மா?
- மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
- வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் துவங்கும் முன்பே மும்பை அணியின் கேப்டன் மாற்றப்பட்ட சம்பவம் பேசு பொருளாக மாறியது. அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டவரும், மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்தவருமான ரோகித் சர்மா நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிய கேப்டனுடன் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய போட்டிகளில் தோல்வியை தழுவி தடுமாறி வருகிறது. மேலும் ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் மற்றும் ரோகித் இடையே கருத்து வேறுபாடு இருக்குமோ என்ற வகையில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
இதனிடையே ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் அவர் 2025 ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்றும் அவர் பெங்களூரு அணியில் இணையலாம் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், 2025 ஐ.பி.எல். தொடரில் ரோகித் சர்மா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக களமிறங்குவார் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சன்ரைசர்ஸ் அணியில் இணைவதற்காக அந்த அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் ரோகித் சர்மாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான ஒப்பந்தத்தின்படி சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் கேப்டனாக செயல்படுவார் என்றும், அதற்கான ஒப்பந்த தொகையை அவரே தெரிவிக்க ஏதுவாக ரோகித் சர்மாவுக்கு பிளாங்க் செக் (blank cheque) வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும், ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து விலகுவது பற்றியோ, அவர் அடுத்த சீசனில் இருந்து மற்ற அணியில் விளையாடுவார் என்றோ இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.