கிரிக்கெட்

விடைபெறும் ஆளுமைகள்.. களமிறங்கும் இளைஞர்கள்.. இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்..?

Published On 2024-07-03 04:15 GMT   |   Update On 2024-07-03 04:15 GMT
  • டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளனர்.
  • ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக கைப்பற்றி ராகுல் டிராவிட் இந்திய அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெறுகிறார்.

ராகுல் டிராவிட்-ஐ தொடர்ந்து இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட இருக்கிறார். இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்து இருந்தது. அதன்படி முன்னாள் இந்திய அணி வீரர்களான கவுதம் கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோர் இந்தியாவின் அடுத்த பயிற்சியாளருக்கான போட்டியில் உள்ளனர்.


 

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் நியமனம் குறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிற்சியாளர் பொறுப்பேற்பது ஒருபுறம் இருந்தாலும், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளனர்.

எனினும், இவர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு ஐ.சி.சி. போட்டி தொடர்கள் நடைபெற உள்ளன. 2025 ஆம் ஆண்டு துவக்கத்தில் சாம்பியன்ஸ் டிராஃபி, இதைத் தொடர்ந்து 2027 ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

அப்போது இந்திய வீரர் ரோகித் சர்மா 40 வயதை கடந்திருப்பார். விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா 39 வயதில் இருப்பர். அந்த வகையில், 2027 உலகக் கோப்பை தொடரில் இவர்கள் விளையாடுவது அவரவர் உடல்திறன் சார்ந்தே முடிவு செய்யப்படும். அந்த வகையில், புதிய தலைமை பயிற்சியாளர் 2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கு பின்பு இந்திய அணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும் மிகமுக்கிய பொறுப்பில் இருப்பார்.

 


இதைத் தொடர்ந்து இந்திய அணியில் மூன்றுவகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஏற்ற வைகயில், பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மென்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் என சரியான வீரர்களை கண்டறிவது மற்றும் வீரர்களை சரியாக பயன்படுத்திக் கொள்வது அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவது புதிய தலைமை பயிற்சியாளருக்கு சவாலாக இருக்கும்.

டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறும் நிலையில், இவருக்கு மாற்றாக டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா சிறந்த தேர்வாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தவிர கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரும் இந்த பதவிக்கு கடும் போட்டியாளர்களாக இருப்பர். டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்கல் இருக்காது என்ற வகையில், ஒருநாள் போட்டிக்கான அடுத்த கேப்டனை தேர்வு செய்வது மிக முக்கிய பணியாக இருக்கும்.

தற்போதைய கேப்டனாக ரோகித் சர்மா சிறப்பாக பங்காற்றி வருகிறார். அந்த வகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரை தொடர்ந்து கேப்டன் பொறுப்பை ஏற்கும் வீரர் யார் என்பதை முடிவு செய்வதும் அதிக சவாலான ஒன்றாக இருக்கும்.

 


கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.சி.சி. தொடர்களில் இந்திய அணி கடுமையான போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடைசியாக விளையாடிய இரண்டு ஐ.சி.சி. தொடர்களில் நடைபெற்ற 20 போட்டிகளில் 19 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது.

அந்த வகையில், இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார், டி20 அணிக்கு அடுத்த கேப்டன் யார் என பல்வேறு கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. தற்போதைய சூழலில் இந்திய அணி தற்காலிக கேப்டன், தற்காலிக பயிற்சியாளருடன் அடுத்தக்கட்ட போட்டிகளுக்கு முன்னேற துவங்கி உள்ளது.

உலக கிரிக்கெட்டில் வலிமை மிக்க இந்திய அணியை அடுத்து வழிநடத்தப் போவது யார், இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் இந்திய அணியின் எதிர்காலம் புதியவர்கள் கையில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Tags:    

Similar News