கிரிக்கெட் (Cricket)

சாம்பியன் டிராபியை நடத்த விருப்பம் தெரிவித்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்

Published On 2023-11-28 10:30 GMT   |   Update On 2023-11-28 10:30 GMT
  • 2025 சாம்பியன்ஸ் கோப்பை பொதுவான இடமாக கருதப்படும் துபாயில் நடத்தப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
  • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை ஐஸ்லாந்தில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

ஐசிசியின் சாம்பியன் டிராபி தொடர் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரின் புள்ளி பட்டியலில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளன.

ஆனால் இன்னும் பாகிஸ்தானில் பாதுகாப்பு சூழ்நிலைகள் திருப்தியளிக்காத காரணத்தால் இந்தியா அந்நாட்டுக்கு சென்று விளையாடுவதற்கு தயக்கம் காட்டும். குறிப்பாக இருநாட்டுக்கும் இடையே நிலவும் தற்போதைய எல்லை பிரச்சினையும் விரிசலும் இதே போல நீடிக்கும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்திய அரசு அனுமதி கொடுக்காது என்று தெரிய வருகிறது.

அதன் காரணமாக 2025 சாம்பியன்ஸ் கோப்பை பொதுவான இடமாக கருதப்படும் துபாயில் நடத்தப்படும் என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அல்லது 2023 ஆசிய கோப்பை தொடரை போலவே பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் அந்நாட்டிலும் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பொதுவான இடமான துபாயிலும் நடைபெறும் என்று தெரிய வருகிறது.

இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை ஐஸ்லாந்தில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறிய ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம், நாங்கள் பின்வாங்குபவர்கள் அல்ல. 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதற்கான எங்களின் ஏலத்தை இன்று வெளியிட்டுள்ளோம். முடிவு குறித்து ஐசிசி-யின் இயக்குனர் கிரேக் பார்க்லே என்ன சொல்கிறார் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம் என கூறியது.

Tags:    

Similar News