மகளிர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ. அணியை எளிதில் வீழ்த்தியது இந்தியா
- முதலில் ஆடிய இந்தியா 201 ரன்களைக் குவித்தது.
- அந்த அணியின் ஹர்மன்பிரித் கவுர், ரிச்சா கோஷ் அரை சதம் கடந்தனர்.
தம்புல்லா:
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா, யு.ஏ.இ அணிகள் மோதின. டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்களைக் குவித்தது. ரிச்சா கோஷ் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அரை சதம் கடந்த ஹர்மன்பிரித் கவுர் 66 ரன்னில் வெளியேறினார். ஷபாலி வர்மா 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்கியது. இந்திய அணியினரின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கால் யு.ஏ.இ. அணி சிரமப்பட்டது.
ஈஷா ரோகித் 38 ரன்கள் எடுத்தார். கவிஷ்கா எகோடகே பொறுப்புடன் ஆடி கடைசி வரை அவுட்டாகாமல் உள்ளார்.
இறுதியில், யு.ஏ.இ. அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.