2-வது டி20 போட்டியில் வெற்றி: ஜிம்பாப்வேவை பழிக்குப்பழி வாங்கியது இந்தியா
- முதலில் ஆடிய இந்தியாவின் அபிஷேக் சர்மா சதமடித்தார்.
- அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 134 ரன்களை எடுத்து தோற்றது.
ஹராரே:
இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 234 ரன்களைக் குவித்தது. முதலில் நிதானமாக ஆடி அரை சதமடித்த அபிஷேக் சர்மா அதன்பின் அதிரடியில் இறங்கி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்தது.
ருத்ராஜ் கெய்க்வாட் 47 பந்தில் 77 ரன்னும், ரிங்கு சிங் 22 பந்தில் 48 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
இதையடுத்து, 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. அந்த அணியின் வெஸ்லி மதேவரே ஓரளவு தாக்குப்பிடித்து 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். பென்னெட் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஜிம்பாப்வே 20 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.