கிரிக்கெட் (Cricket)

இந்தியா- பாகிஸ்தான் போட்டி: அகமதாபாத்தில் விண்ணைத் தொடும் நட்சத்திர ஓட்டல் ரூம் வாடகை

Published On 2023-06-29 03:15 GMT   |   Update On 2023-06-29 03:15 GMT
  • அக்டோபர் 15-ந்தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் மோதல்
  • 3 ஆயிரம் ரூபாயாக இருந்த வாடகை 27,233 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

ஐசிசி உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணை நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது.

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15-ந்தேதி நடைபெறுகிறது.

போட்டி அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் குறித்து ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். அகமதாபாத் மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இதனால் அன்றைய தினம் அகமதாபாத் ரசிகர்கள் படையால் திருவிழா போன்று ஜொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கிடையே ரசிகர்கள் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் கூடும் வாய்ப்பை பயன்படுத்தி அங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள் ரூம் வாடகைகளை தாறுமாறாக உயர்த்தியுள்ளன.

5 ஆயிரம் ரூபாய் வாடகை கொண்ட ரூம் வாடகை, அக்டோபர் 15-ந்தேதியன்று 10 மடங்கு அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் ரூம்கள் புக் செய்யும் இணையதளம் மூலம் இந்த உயர்வு தெரியவந்துள்ளது. அப்படி விலை உயர்த்தப்பட்ட நிலையிலும் ரூம்கள் அனைத்தும் புக் ஆகிவிட்டதாக தெரிகிறது.

ஆடம்பர ஓட்டல்களில் ஒருநாள் ரூம் வாடகை 5 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை அகமதாபாத் நகரில் இருக்கிறது. தற்போது அந்த வாடகை 40 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அகமதாபாத் நகரில் உள்ள ஐடிசி ஓட்டல்களின் வெல்கம் ஓட்டலில் ஜூலை 2-ந்தேதி ரூம் வாடகை 5,699 ரூபாய். அதுவே அக்டோபர் 15-ந்தேதி 71,999 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஜி. ஹைவேயில் உள்ள ரெனாய்ஸ்சான்ஸ் அகமதாபாத் ஓட்டலில் தற்போது 8 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதுவே அக்டோபர் 15-ந்தேதி 90,679 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரைடு பிளாசா ஓட்டல், ரூம் வாடகையை 36,180 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

பட்ஜெட் விலையான 3 ஆயிரம் ரூபாயாக இருந்த வாடகை 27,233 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

விலை விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்தாலும் பல நட்சத்திர ஓட்டல்களில் ரூம்கள் அனைத்தும் புக் ஆகிவிட்டதாம்.

ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கத்தின் அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் உயர் நடுத்தர இந்திய ரசிகர்கள் அதிக அளவில் ரூம்களை புக் செய்ய ஆர்வம் காட்டி வருவதால் வாடகை உயர்த்தப்பட்டள்ளது.

குறிப்பிட்ட நாளில் தேவை மிகவும் அதிகமாக இருப்பதால், ஓட்டல் உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தி கூடுதல் வருமானம் பார்க்கலாம் என நினைத்திருக்கலாம். விலை உயர்த்தப்பட்டாலும் ரூம்கள் அனைத்தும் நிரம்பி விடும் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதுதான் அதற்கு காரணம். தேவை குறைந்தால் வாடகை தானாக குறைக்கப்படும்.

இந்தியா- பாகிஸ்தான் போன்ற சுவாரஸ்ரமான கிரிக்கெட் போட்டியை பார்க்க வெகு தூரத்தில் இருந்து வர தயங்காத ரசிகர்கள் ஆடம்பர ஓட்டல்களை விரும்புகின்றனர்'' என்றார்.

நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஓட்டல்களில் ரூம் வாடகை பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. போட்டி நாள் நெருங்கும் நேரத்தில் வாடகை உயர்வுக்கு வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News