கிரிக்கெட் (Cricket)

1987-ல் ஒருநாள் போட்டி அறிமுகம்: சேப்பாக்கம் மைதான கண்ணோட்டம்

Published On 2023-03-21 07:39 GMT   |   Update On 2023-03-21 07:39 GMT
  • 1997-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 327 ரன் குவித்ததே சேப்பாக்கத்தில் அதிகபட்ச ஸ்கோராகும்.
  • வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராம்பால் 51 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதே (2011-இந்தியாவுக்கு எதிராக) சிறந்த பந்து வீச்சாகும்.

இந்தியாவில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியமாகும்.

2011 உலக கோப்பை போட்டியையொட்டி இந்த ஸ்டேடியம் ஒவ்வொரு கேலரியாக சீரமைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 புதிய கேலரிகள் திறக்கப்பட்டன.

சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டி 1987 அக்டோபர் 9-ல் அறிமுகம் செய்யப்பட்டது. உலக கோப்பைக்கான அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 1 ரன்னில் இந்தியாவை தோற்கடித்தது. கடைசியாக 2019 டிசம்பர் 15-ந் தேதி இங்கு இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மோத உள்ளன. சேப்பாக்கத்தில் இதுவரை 23 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்திய அணி 13 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது. இதில் 7-ல் வெற்றி பெற்றது. 5 ஆட்டத்தில் தோற்றது. ஒரு போட்டி முடிவு இல்லை. ஆஸ்திரேலியா 5 போட்டியில் 4-ல் வெற்றி பெற்றது. ஒன்றில் தோற்றது. இரு அணிகளும் 2 ஆட்டத்தில் மோதியுள்ளன. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. 2017 செப்டம்பரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 26 ரன்னில் வெற்றி பெற்றது.

1997-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 327 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். அதே நேரத்தில் 2007-ல் ஆப்பிரிக்க லெவனுக்கு எதிராக ஆசிய லெவன் 7 விக்கெட்டுக்கு 337 ரன் குவித்து இருந்தது. இந்திய அணி சேப்பாக்கத்தில் அதிகபட்சமாக 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்து இருந்தது. 2015 அக்டோபரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்த ரன்னை எடுத்து இருந்தது.

2011 உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக கென்யா 69 ரன்னில் சுருண்டது குறைந்தபட்ச ஸ்கோராகும். அதற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 103 ரன்னில் (2010) சுருண்டு இருந்தது.

டோனி 6 ஆட்டத்தில் விளையாடி 401 ரன் எடுத்துள்ளார். சராசரி 100.25 ஆகும். 2 சதமும், ஒரு அரை சதமும் இதில் அடங்கும். அதிகபட்சமாக 139 ரன் எடுத்துள்ளார். அதற்கு அடுத்தபடியாக விராட் கோலி 283 ரன் (7 போட்டி) எடுத்துள்ளார். ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் சயித் அன்வர் அதிக ரன் எடுத்து சாதனை படைத்து இருந்தார். 1997-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி இந்தியாவுக்கு எதிராக அவர் 146 பந்துகளில் 194 ரன் குவித்தார். இதில் 22 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். அதற்கு அடுத்தப்படியாக டோனியும், ஹெட்மயரும் 139 ரன் எடுத்து இருந்தனர்.

வங்காளதேச வீரர் முகமது ரபீக் அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளை (3 போட்டி) கைப்பற்றி இருந்தார். அவருக்கு அடுத்தப்படியாக அகர்கர், ஹர்பஜன்சிங் (இந்தியா), அல்பி மார்கல் (தென் ஆப்பிரிக்கா) தலா 7 விக்கெட் எடுத்து இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராம்பால் 51 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதே (2011-இந்தியாவுக்கு எதிராக) சிறந்த பந்து வீச்சாகும்.

Tags:    

Similar News