மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
- முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவரில் 265 ரன்கள் சேர்த்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 122 ரன்களில் சுருண்டது.
பெங்களூரு:
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்தது. ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து 117 ரன்னில் அவுட்டானார். தீப்தி ஷர்மா 37 ரன்னில் ஆட்டமிழந்தார். பூஜா வஸ்த்ராகர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் அயப்ங்கா 3 விக்கெட்டும், மசபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 37.4 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சூன் லுலுஸ் அதிகமாக 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 143 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஆஷா ஷோபனா 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.