null
இம்பேக்ட் பிளேயருக்கு உண்டான எதிர்பார்ப்பே போச்சு உங்களாள- கிண்டல் அடிக்கும் ரசிகர்கள்
- சென்னை அணியில் இம்பேக்ட் பிரேயராக துஷார் தேஷ்பாண்டே களமிறங்கினார்.
- குஜராத் அணியில் இம்பேக்ட் பிளேயராக தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார்.
ஐபிஎல் 16-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை-குஜராத் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒவ்வொரு முறையும் ஐபிஎல் தொடரில் ஏதாவது புதிய விதிமுறை அறிமுகத்திற்கு வரும். அந்த வகையில் இந்த முறை 'இம்பேக்ட் பிளேயர்' என்கிற முறையை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த புதிய விதியின் படி, டாஸ் போடும் போது வழங்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலுடன், மாற்று வீரர்கள் 5 பேரின் பெயர்களையும் வழங்க வேண்டும். அந்த 5 பேரில் இருந்து ஒருவரை, ஆட்டத்தின் நடுவில் களமிறக்கலாம்.
அது பந்து வீச்சாக இருந்தாலும் சரி, பேட்டிங் வரிசையாக இருந்தாலும் சரி, அது அந்த அணியின் விருப்பம். அதே நேரத்தில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால் மட்டுமே, கூடுதலாக ஒரு வெளிநாட்டு வீரரை களத்தில் இறக்க முடியும். ஒருவேளை 4 வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால், ஐந்தாவதாக மற்றொரு வெளிநாட்டு வீரரை 'இம்பேக்ட் ப்ளேயராக' களத்தில் இறக்க முடியாது.
இந்த புதிய விதியை தன்னுடைய முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயன்படுத்தியது. குஜராத்திற்கு எதிராக களமிறங்கிய சென்னை அணியின் அம்பாதி ராயுடு பேட்டிங் செய்த நிலையில், சென்னை அணி பீல்டிங் செய்யும் போது, அவருக்கு பதிலாக 'இம்பேக்ட் பிரேயர்' முறையில் துஷார் தேஷ்பாண்டே மாற்றப்பட்டார்.
3.2 ஓவர்களை வீசிய அவர், 51 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். 15.30 எக்கானமியை பெற்றார். இவ்வாறு களம் கண்டதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் முதல் 'இம்பேக்ட் ப்ளையர்' என்கிற பெருமையை பெற்றார் தேஷ்பாண்டே.
இதேபோல குஜராத் அணியிலும் இம்பேக்ட் பிளேயராக தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார். குஜராத் அணி பீல்டிங் செய்யும் போது சிக்சரை தடுக்க சென்ற வில்லியம்சனுக்கு காலில் அடிப்பட்டதால் அவர் பாதிலேயே வெளியேறினார். இதனால் அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் பேட்டிங் செய்தார்.
அவர் 17 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருவரும் சொல்லி கொள்ளும் அளவுக்கு எந்த இம்பேக்ட்டும் கொடுக்கவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.