அச்சுறுத்தும் வானிலை.. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்த சோதனை: மழை பெய்தால் என்ன நடக்கும் தெரியுமா?
- சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன
- குஜராத்தில் இன்று மாலையில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் குஜராத்தில் தற்போது நிலவும் வானிலை ரசிகர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான குவாலிஃபையர்- 2 போட்டியின் போதும் மழை பெய்தது.
இன்று மதிய நிலவரப்படி வானம் ஓரளவு தெளிவாக இருந்தது. ஆனாலும் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மாலையில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்குப் பிறகு போட்டி தொடங்கி குறைந்தபட்சம் 5 ஓவர்களை முடிக்க முடியாவிட்டால், போட்டியை நடத்த மற்றொரு நாள் (ரிசர்வ் நாள்) ஒதுக்கப்படும். ஆனால், சில கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்படும். இன்று குறைந்தபட்சம் ஒரு பந்தாவது வீசப்பட்டால், ரிசர்வ் நாள் போட்டி முந்தைய நாள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கி நடைபெறும். இன்று டாஸ் போடப்பட்டாலும், ஆட்டம் நடக்காத சூழ்நிலையில், நாளை இரு தரப்புக்கும் 20 ஓவர் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டு போட்டி தொடங்கும். ரிசர்வ் நாளில் மீண்டும் டாஸ் போடப்படும். அணிகளில் மாற்றம் செய்ய கேப்டன்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.