ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஆர்சிபி ஆல்ரவுண்டர்
- வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியபோது வில் ஜாக்ஸ் காயமடைந்துள்ளார்.
- அவருக்கு பதிலாக மைக்கேல் பிரேஸ்வெல்லை அணியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
ஐபிஎல் 2023 தொடருக்காக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான வில் ஜாக்ஸ் என்பவரை ரூ. 3.2 கோடியில் ஆர்சிபி அணி வாங்கியது. ஏற்கனவே ஆர்சிபியில் கிளென் மேக்ஸ்வெல் இருக்கும் நிலையில், மிடில் ஆர்டருக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் விதமாக வில் ஜாக்ஸை வாங்கியது.
ஐபிஎல் தொடர் மார்ச் 31-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியபோது வில் ஜாக்ஸ் காயமடைந்துள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்தபோது அவரது தசையில் காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் காயத்தை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், ஓய்வில் இருக்கமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல்லை அணியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் உச்சகட்ட பார்மில் இருந்து வரும் பிரேஸ்வெல் இதற்கு முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றது இல்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஏப்ரல் 2-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.