அதிரடி அரை சதம் விளாசிய ருதுராஜ்- துபே: மும்பைக்கு 207 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சிஎஸ்கே
- கேப்டனாக 2-வது அரை சதத்தை ருதுராஜ் பதிவு செய்தார்.
- மும்பை அணி தரப்பில் ஹர்திக் 2 விக்கெட்டும் ஷ்ரேயாஸ் கோபால், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மும்பை:
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதி வருகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சென்னையின் தொடக்க வீரர்களாக ரகானே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ரகானே 5 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ரச்சின் 21 ரன்னில் வெளியேறினர்.
இதனையடுத்து ருதுராஜ் - துபே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் அரைசதம் விளாசினார். கேப்டனாக அவரின் 2-வது அரைசதம் இதுவாகும். அவர் 69 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய துபே அரைசதம் விளாசினார்.
இந்த தொடரில் மோசமாக விளையாடி வரும் மிட்செல் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி 4 பந்துகளுக்கு களம் புகுந்த டோனி ஹட்ரிக் சிக்ஸ் விளாசி அசத்தினார்.
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் ஹர்திக் 2 விக்கெட்டும் ஷ்ரேயாஸ் கோபால், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.