null
ஐபிஎல் 2024: பண்ட் ஏமாற்றம், பொரேல் அபாரம்- பஞ்சாப்-க்கு 175 ரன் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
- ரிஷப் பண்ட் 13 பந்தில் 2 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்தார்.
- அபிஷேக் பொரேல் 10 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் தவான் பந்து வீச்சை தேர்வை செய்தார்.
அதன்படி டெல்லி அணியின் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். என்றபோதிலும் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியவில்லை. டேவிட் வார்னர் 21 பந்தில் 29 ரன்களும், மிட்செல் மார்ஷ் 12 பந்தில் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஷாய் ஹோப் 25 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 13 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.
ரிஷப் பண்ட் அவுட்டாகும்போது டெல்லி அணி 12.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் டெல்லி அணியின் ரன் குவிக்கும் வேகத்தில் தடை ஏற்பட்டது.
அக்சார் பட்டேல் 13 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். அபிஷேக் பொரேல் அதிரடியாக விளையாட டெல்லி அணியின் ஸ்கோர் 150 ரன்களை கடந்தது.
அபிஷேக் பொரேல் கடைசி ஓவரில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் விரட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவில் 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. பொரேல் 10 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ரிஷப் பண்ட்
ஹர்ஷல் பட்டேல் கடைசி ஓவரில 25 ரன்கள் விட்டுக்கொடுத்தார். முதல் 3 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-
1. டேவிட் வார்னர், 2. மிட்செல் மார்ஷ், 3. ஷாய் ஹோப், 4. ரிஷப் பண்ட், 5. ரிக்கி புய், 6. டிரிஸ்டான் ஸ்டப்ஸ், 7. அக்சார் பட்டேல், 8. சுமித் குமார், 9. குல்தீப் யாதவ், 10. கலீல் அகமது, 11. இஷாந்த் சர்மா.
பஞ்சாப் கிங்ஸ் அணி விவரம்:-
1. தவான், 2. பேர்ஸ்டோ, 3. சாம் கர்ரன், 4. லிவிங்ஸ்டன், 5. ஜிதேஷ் சர்மா, 6. ஹர்ப்ரீத் பிரார், 7. ஹர்ஷல் பட்டேல், 8. ரபடா, 9. ராகுல் சாஹர், 10. அர்ஷ்தீப் சிங், 11. ஷஷாங்க் சிங்.