இரண்டு இளம் வீரர்களுக்கு புகழாரம் சூட்டிய தவான்
- ஷசாங் வந்து ஒரு அபாரமான ஆட்டத்தை ஆடினார்.
- அசுதோஷும் ஆட்டத்தை நன்றாக எடுத்து சென்றார்.
அகமதாபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி 70 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது.
அதன்பின் ஷசாங்சிங். அஷுதோஸ் சர்மா ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். ஷசாங் சிங் 29 பந்தில் 61 ரன்ம், அஷுதோஸ் 17 பந்தில் 31 ரன்னும் எடுத்தனர். பஞ்சாப் 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது.
வெற்றி குறித்து பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது:-
இது ஒரு அற்புதமான ஆட்டம்.மிக மிக நெருக்கமாக இருந்தது.வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க திட்டமிட்டோம். ஆனால் நான் சீக்கிரமே அவுட் ஆனேன் சில விக்கெட்டுகளை ஆரம்பத்தில் இழந்தோம்.
அதன்பின் ஷசாங் வந்து ஒரு அபாரமான ஆட்டத்தை ஆடினார். பெரிய இலக்கை துரத்தும்போது நீங்கள் உத்வேகத்தை தொடர வேண்டும். ஷசாங் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
அவர் பந்தை மிக நேர்த்தியாக விளையாடினார். அவர் பதற்றம் அடையாமல் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். அவர் 7-வது வரிசையில் இருந்து ஆரம்பித்து தற்போது தனது நேர்மறை மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார்.
அசுதோஷும் ஆட்டத்தை நன்றாக எடுத்து சென்றார். இரண்டு இளம் வீரர்களும் அமைதி காத்து, அழுத்தத்தை குறைத்தனர். இவ்வாறு தவான் கூறினார்.
குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறும்போது, நாங்கள் சில கேட்சுகளை தவற விட்டோம். ரன் சேசிங்கில் கேட்சுகளை தவற விடும் போது வெற்றி கடினமாகி விடும். 15-வது ஓவர் வரை ஆட்டத்தில் இருந்தோம். ஆனால் கேட்சுகளை கைவிடும் போது நீங்கள் சிக்கலில் இருப்பீர்கள். நாங்கள் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்றார்.