விராட் கோலி சாதனையை முறியடித்த டோனி
- நேற்றைய போட்டியில் டோனி 16 பந்தில் 37 ரன் எடுத்தார்.
- ஆட்டத்தின் கடைசி ஓவரில் டோனி 4,6,0,4,0,6 என 20 ரன்கள் விளாசினார்.
சென்னை:
சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய முதல் 2 ஆட்டத்தில் டோனி களம் இறங்கவில்லை. இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆனால் விசாகப்பட்டினத்தில் சி.எஸ்.கே. மோதிய நேற்றைய 3-வது போட்டியில் டோனி களம் இறங்கி தனது அதிரடியான ஆட்டம் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சி.எஸ்.கே. தோற்றாலும் டோனியின் அபாரமான ஆட்டத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.
23 பந்தில் 72 ரன் தேவை என்ற கடினமான நிலையில் இருந்த போதுதான் டோனி 8-வது வீரராக களம் வந்தார். முகேஷ்குமார் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவர் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் கேட்சில் இருந்து தப்பினார். அதற்கு அடுத்த ஓவரில் கலீல் அகமதுவின் கடைசி பந்தில் டோனி சிக்சர் அடித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் அவர் 4,6,0,4,0,6 என 20 ரன்கள் விளாசினார். அவர் 16 பந்தில் 37 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும்.
3 சிக்சர்கள் மூலம் டோனி ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 4-வது இடத்தில் இருந்த கோலியை முந்தினார். டோனி 242 சிக்சர்களுடன் 4-வது இடத்திலும், கோலி 241 சிக்சர்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் டோனியை கோலி முந்தினார். தற்போது அவரை டோனி பின்னுக்கு தள்ளியுள்ளார். கோலியோ முதல் வரிசையில் ஆடுகிறார். ஆனால் டோனி களத்தில் இறங்கும் வாய்ப்பு அரிதாகவே இருக்கிறது.
கிறிஸ் கெய்ல் (357 சிக்சர்), ரோகித் சர்மா (261), டிவில்லியர்ஸ் (251) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.