கிரிக்கெட் (Cricket)

மழை, கடைசி கட்ட தோல்வியால் எலிமினேட்டருக்கு தள்ளப்பட்ட ராஜஸ்தான்: பிளேஆஃப் சுற்று ஒரு பார்வை

Published On 2024-05-20 10:09 GMT   |   Update On 2024-05-20 10:09 GMT
  • முதல் 9 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று முதல் இரண்டு இடத்திற்கான வாய்ப்பை உருவாக்கியிருந்தது.
  • ஆனால் கடைந்து ஐந்து போட்டிகளில் மழைக்காரணமாக ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது.

ஐபிஎல் 2024 சீசனில் லீக் ஆட்டங்கள் நேற்றோடு முடிவடைந்தன. ஒவ்வொரு அணிகளும் 14 போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டன. லீக் போட்டிகளின் கடைசி கட்டங்கள் வரை எந்தெந்த அணிகள் பிளேஆஃப் சுற்றுகளுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு நீடித்துக் கொண்டே இருந்தது.

இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுகின்றன. ஒவ்வொரு அணியும் முதல் இடங்களை பிடிக்க விரும்பும். ஏனென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஒருமுறை தோல்வியடைந்தால் மறுமுறை மோத வாய்ப்பு கிடைக்கும்.

இந்தத் தொடரில் முதலில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 9 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்தை உறுதி செய்யும் என்ற நிலையில் இருந்தது. கைவசம் 5 போட்டிகள் இருந்ததால் எப்படியும் முதல் இடங்களில் ஒரு இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து நான்கு போட்டிகளில் அந்த அணிக்கு தோல்விதான் கிடைத்தது. கடைசியாக நேற்று கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 2-வது இடத்திற்கு முன்னேறும் நிலை இருந்தது. ஆனால் மழையால் போட்டி கைவிடப்பட்டது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் 17 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

நாளை செவ்வாய்க்கிழமை (21-ந்தேதி) பிளேஆஃப் சுற்றுகள் தொடங்குகின்றன. நாளை நடைபெறும் குவாலிபையர்-1ல் முதல் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2-வது இடம் பிடித்துள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி குவாலிபையர்-2ல் விளையாட வேண்டும். இது 24-ந்தேதி நடக்கிறது.

22-ந்தேதி புதன்கிழமை எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. இதில் 3-வது இடம் பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ்- 4-வது இடம் பிடித்த ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் தோல்வியடையும் அணி வெளியேறும்.

வெற்றி பெற்ற அணி 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் குவாலிபையர்-2ல் பலப்பரீட்சை நடத்த வேண்டும்.

Tags:    

Similar News