கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கிரிக்கெட்டில்: பிரையன் லாரா சாதனையை முறியடித்த டிம் சவுத்தி

Published On 2024-09-30 05:25 GMT   |   Update On 2024-09-30 05:25 GMT
  • இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.
  • நியூசிலாந்தின் பிராண்டன் மெக்கல்லம் 107 சிக்சர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸின் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 602 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியானது இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 88 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.

பின்னர் நியூசிலாந்து ஃபாலோ ஆன் ஆனதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையிலும், டெவான் கான்வே 61 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 78 ரன்களையும், மிட்செல் சான்ட்னர் 67 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இறுதியில், நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 360 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணியானது இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் 2-0-என டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவிய பட்சத்திலும் அந்த அணி கேப்டன் டிம் சவுத்தி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். அதன்படி இப்போட்டியில் டிம் சவுத்தி ஒரு சிக்சரை விளாசியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்களை விளாசிய 7-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

முன்னதாக வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா மற்றும் நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி ஆகியோர் தலா 88 சிக்சர்களை விளாசி 7-ம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது, டிம் சவுத்தி 89 சிக்சர்களை விளாசி 7-ம் இடத்தை பிடித்துள்ளார்.

அதேசமயம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 131 சிக்சர்களை விளாசி முதலிடத்திலும், நியூசிலாந்தின் பிராண்டன் மெக்கல்லம் 107 சிக்சர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

Tags:    

Similar News