null
போலி இணைய தளத்தில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை- கள்ள மார்க்கெட்டில் ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் நிர்ணயம்
- ஐ.பி.எல். டிக்கெட்டுகள் கள்ள மார்க்கெட்டில் ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் விலை போகிறது.
- ரோகித் என்பவர் இந்த போலி இணையதளம் மூலம் 5 டிக்கெட்டுகளை பெற்று ரூ.8,250-யை இழந்துள்ளார்.
சென்னை:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது.
இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டன. டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700 ஆகவும், அதிகபட்சமாக ரூ.7,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
ஆன்லைனில் டிக்கெட் வாங்க முடியாமல் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இணையதளம் முடங்கியதால் அவர்கள் டிக்கெட் இல்லாமல் தவித்தனர்.
இந்த நிலையில் போலியான இணைய தளத்தில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. போலி ஐ.பி.எல். டிக்கெட்டுகளால் ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.
மோசடியாளர்கள் ஐ.பி.எல். டிக்கெட்டுக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்தைபோலவே போலியான இணைய தளத்தை உருவாக்கி உள்ளனர். புதிய கணக்கை பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட்டுகளை முன்கூட்டியே வழங்குவது போல் போலியான அந்த தளம் வடிவமைத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த விலையை விட (ரூ.1,700) குறைவான விலையாக ரூ.1,650 விலையில் போலியான டிக்கெட்டுகள் பட்டியலிடப்பட்டு இருந்தன.
சென்னை-பெங்களூரு போட்டிக்காக 'ஏ' மேல் தளம் கேலரியில் போலி இணையதளம் டிக்கெட் வழங்கியது. அப்படி ஒரு கேலரியே அங்கு இல்லை. இந்த கேலரி இடிக்கப்பட்டு புதிதாக நவீனமயமாக்கப்பட்டு கே.எம்.கே. ஸ்டாண்டாக அமைக்கப்பட்டுள்ளது.
பதிவை முடித்த பிறகு குறிப்பிட்ட யு.பி.ஐ. ஐ.டி.யில் பணம் செலுத்தி பரிவர்த்தனை விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்கும் வழக்கத்தில் இருந்து வேறுபட்ட கட்டண செயல்முறையின் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது.
கியூஆர்.குறியீட்டு மின் டிக்கெட்டை உடனடியாக வழங்கும் முறையான இணைய தளம்போல் இல்லாமல் 12 மணி நேரத்துக்கு முன்பு மட்டுமே பதிவு செய்யப்பட்ட முகவரியில் டிக்கெட்டுகள் இமெயில் செய்யப்படும் என்று இந்த மோசடி இணையதளம் அறிவித்து இருந்தது.
ரோகித் என்பவர் இந்த போலி இணையதளம் மூலம் 5 டிக்கெட்டுகளை பெற்று ரூ.8,250-யை இழந்துள்ளார். தொலைபேசியில் வந்த தொடர்பை தொடர்ந்து அவர் ஏமாற்றப்பட்டுள்ளார். இறுதி பரிவர்த்தனை பக்கங்களை பார்த்த பிறகுதான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
ஐ.பி.எல். டிக்கெட்டுகள் கள்ள மார்க்கெட்டில் ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் விலை போகிறது.
இதனால் குறைந்த விலையில் டிக்கெட் கிடைக்கிறது என்று சிலர் போலி இணையதளம் மூலம் பணத்தை இழந்து ஏமாந்துள்ளனர்.