கிரிக்கெட் (Cricket)

கேன் வில்லியம்சன் சதம்: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் நியூசிலாந்து அபார வெற்றி

Published On 2024-02-16 05:15 GMT   |   Update On 2024-02-16 05:15 GMT
  • கேன் வில்லியம்சன் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
  • வில் யங் 60 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்று வெற்றிக்கு உதவினார்.

நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 242 ரன்னும், நியூசிலாந்து 211 ரன்னும் எடுத்தன. 31 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா 235 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்துக்கு 267 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 13.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ரன் எடுத்து இருந்தது.

இன்று 4-ம் நாள் ஆட்டம் நடந்தது. டாம் லாதம், வில்லியம்சன் தொடர்ந்து விளையாடினர். அவர்கள் நிதானமாக ஆடினர். ஆனால் டாம் லாதம் 30 ரன்னிலும், அடுத்து களம் வந்த ரவீந்திரா 20 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் சதம் அடித்தார். அவர் 98-வது டெஸ்டில் தனது 32-வது சதத்தை பூர்த்தி செய்தார். அவரது ஆட்டத்தால் நியூசிலாந்து வெற்றியை நோக்கி சென்றது. அவருக்கு துணையாக விளையாடிய வில் யங் அரைசதம் அடித்தார்.

இருவரின் சிறப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து 94.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேன் வில்லியம்சன் 133 ரன்களுடனும், வில் யங் 60 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

Tags:    

Similar News