கிரிக்கெட் (Cricket)

கேலோ இந்தியா: ஒரே நாளில் 17 பதக்கத்தை வென்ற தமிழக அணி

Published On 2024-01-25 07:06 GMT   |   Update On 2024-01-25 07:06 GMT
  • முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாசில் தமிழகத்துக்கு மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.
  • தடகளத்தில் 3 தங்கம், 4 வெள்ளியும், ஸ்குவாசில் 2 தங்கமும் கிடைத்தன.

சென்னை:

6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது.

5-வது நாள் முடிவில் தமிழ்நாடு 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 31 பதக்கம் பெற்று இருந்தது. நேற்றைய 6-வது நாளில் தமிழக அணிக்கு 5 தங்கம் உள்பட மேலும் 17 பதக்கம் கிடைத்தது.

தடகளத்தில் 3 தங்கம், 4 வெள்ளியும், ஸ்குவாசில் 2 தங்கமும் கிடைத்தன. மல்லர் கம்பம் போட்டியில் 1 வெள்ளி, 1 வெண்கலம், குத்துச்சண்டையில் 4 வெண்கலம், சைக்கிளிங் பந்தயம், வாள்வீச்சில் தலா 1 வெண்கலமும் தமிழக வீரர், வீராங்கனைகள் பெற்றனர்.

தடகள போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் தருண் விகாஷ் 2.01 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.

பெண்களுக்கான டிரிபிள்ஜம்ப் பந்தயத்தில் தமிழகத்துக்கு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. பவீனா ராஜேஷ் 12.10 மீட்டர் தூரம் தாண்டி முதல் இடத்தையும், பமிலா வர்ஷினி 11.84 மீட்டர் தூரம் தாண்டி 2-வது இடத்தையும் பிடித்தனர்.

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அபிநயா (12.21 வினாடி), ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் கோகுல் பாண்டியன் (10.89 வினாடி) ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.

ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்துக்கு 2 தங்கம் கிடைத்தது. ஆண்கள் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழக அணி 2-0 என்ற கணக்கில் உத்திரபிரதேசத்தையும், பெண்கள் அணிகள் பிரிவில் 2-0 என்ற கணக்கில் மராட்டியத்தையும் தோற் கடித்தன.

ஸ்குவாஷ் போட்டியில் ஏற்கனவே பெண்கள் தனி நபர் பிரிவில் பூஜா ஆர்த்தி தங்கம் வென்று இருந்தார். சந்தேஷ், அரிஹந்த், தீபிகா, ஷமினா வெண்கல பதக்கம் பெற்றார். முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாசில் தமிழகத்துக்கு மொத்தம் 7 பதக்கம் கிடைத்தது.

மல்லர்கம்பம் பந்தயத்தின் ஆண்கள் பிரிவில் ரோகித் சாய்ராம் 8.50 புள்ளிகள் பெற்று வெண்கலமும், மகளிர் பிரிவில் பூமிகா 8.25 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

வாள்வீச்சு போட்டியில் ஆண்கள் சப்ரே பிரிவில் அர்லின், மவுரிஷ், ஷார்ஜின் ஆகியோர் அடங்கிய தமிழக அணி அரைஇறுதியில் 36-45 என்ற கணக்கில் ஜம்மு காஷ்மீரிடம் தோற்றது. இதனால் வெண்கலம் கிடைத்தது. சைக்கிளிங் பந்தயத்தில் தமிழரசி வெண்கலம் வென்றார்.

குத்துச்சண்டை போட்டியின் ஆண்கள் பிரிவில் நவீன்குமார், கபிலன் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ஜீவா, துர்கா ஆகியோரும் வெண்கல பதக்கம் பெற்றனர்.

தடகளம், ஸ்குவாஷ் போட்டிகளில் தமிழக பதக்கங்களை வேட்டையாடியது. தடகளத்தில் இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம், ஆகமொத்தம் 10 பதக்கம் கிடைத்துள்ளது. ஸ்குவாசில் 3 தங்கம், 4 வெண்கலம் கிடைத்துள்ளது.

நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 17 தங்கம், 8 வெள்ளி, 23 வெண்கலத்துடன், 48 பதக்கம் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

மராட்டியம், அரியானா முறையே முதல் 2 இடங்களில் உள்ளன. 

Tags:    

Similar News