கே.எல். ராகுல் விலகல்? லக்னோ அணி விளக்கம்
- ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி மோசமான தோல்வியை தழுவியது.
- அந்த போட்டி முடிந்த பிறகு கேஎல் ராகுலை லக்னோ அணியின் உரிமையாளர் கடுமையாக சாடினார்.
ஐபிஎல் தொடரின் 57-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 இக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனையடுத்து ஆடிய ஐதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டியது. 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது.
இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேஎல் ராகுல் விலகவுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. கடைசி இரண்டு போட்டிகளில் அவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வந்தன.
இந்நிலையில் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகவில்லை என்றும் கடைசி 2 போட்டிகளில் கேஎல் ராகுல் தான் கேப்டனாக செயல்படுவார் என்று லக்னோ அணியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லக்னோ அணி அடுத்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக வருகிற 14-ந் தேதி மோதுகிறது. அதற்கு அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொள்கிறது. அந்த போட்டி வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது.