கிரிக்கெட் (Cricket)

உலகக் கோப்பையில் அதிக விக்கெட்: ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளினார் முகமது சமி

Published On 2023-11-03 01:11 GMT   |   Update On 2023-11-03 01:11 GMT
  • ஜாகீர் கான், ஸ்ரீநாத் ஆகியோர் தலா 44 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்
  • பும்ரா 33 விக்கெட்டுகளும், கும்ப்ளே 31 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா 357 ரன்கள் குவித்த நிலையில், இலங்கை 55 ரன்னில் சுருண்டது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த தொடரின் தொடக்க ஆட்டங்களில் அவர் களம் இறக்கப்படவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக களம் இறங்கினார். அந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகளும், தற்போது ஐந்து விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

மூன்று போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை முகமது சமி 45 விக்கெட்டுகள் வீழ்த்தி, உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் ஜாகீர் கான் 44 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடம் இடத்தில் இருந்தார். தற்போது அவரை சமி பின்னுக்குத் தள்ளியுள்ளார். ஸ்ரீநாத் 44 விக்கெட்டுகள், பும்ரா 33 விக்கெட்டுகள், கும்ப்ளே 31 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் 5 விக்கெட் வீழ்த்துவது சமிக்கு இது 3-வது முறையாகும். இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையில் ஸ்டார்க் உடன் இணைந்துள்ளார்.

இந்திய அணிக்காக அதிக முறை (4) ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 3 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

ஒரே உலகக் கோப்பையில் அதிக முறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். அப்ரிடி (2011), ஸ்டார்க் (2019) ஆகியோர் 4 முறை 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

சமி (2019), ஆடம் ஜம்பா (2023), முகமது சமி (2023) ஆகியோர் 3 முறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News