என்னுடைய நோக்கம் இதுதான்: பிரித்வி ஷா
- 18 வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.
- அறிமுக போட்டியிலே சதம் அடித்த நிலையிலும், ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் பிரித்வி ஷா. 24 வயதான இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது 18 வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அறிமுகமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் சதம் விளாசினார். ஆனால் 2020-க்கும் பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. இரண்டு ஆண்டு கால இடைவெளியில் ஐந்து போட்டிகளில் மட்டுமே இடம் பிடித்தார்.
உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த அவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இங்கிலாந்து கவுன்ட்டி போட்டியில் விளையாடும்போது காயம் ஏற்பட்டது. ஆறு மாத ஓய்விற்குப் பிறகு தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில்தான் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 185 பந்தில் 159 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். இந்த போட்டியில் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாகவே சதத்தை பூர்த்தி செய்தார். இதற்கு முன்னதாக ஒருமுறையும் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே சதம் அடித்துள்ளார். இதன்மூலம் இரண்டு முறை மதிய உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்துள்ளார்.
காயத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில் சதம் அடித்ததன் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்தாக கருதப்படுகிறது.
இதுகுறித்து பிரித்வி ஷா கூறுகையில் "நான் அதிகப்படியாக எதையும் குறித்து யோசித்து கொண்டிருக்கவில்லை. தற்போதைய நிலையில் இருக்க விரும்புகிறேன். எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. காயத்தில் இருந்து மீண்டு வந்து கிரிக்கெட் விளையாடுவதே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள நான், எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். என்னுடைய நோக்கம் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான். என்னுடைய பங்களிப்பு மூலம் இந்த சாதனையை அடைய முயற்சி செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக பிரித்வி ஷா முதல்தர போட்டியில் 383 பந்தில் 379 ரன்கள் அடித்துள்ளார். அப்போதும் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் அடித்தார். இதன்மூலம் முதல்தர போட்டியில் இரண்டு முறை மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.