null
இன்ஸ்டாவில் கலாய்த்து தள்ளிய நவீன் உல் ஹக்.. மாஸ் ரிப்ளை கொடுத்த நைப்
- வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் குல்பாடின் நைப் காயமடைந்தது போல் அப்படியே மைதானத்தில் விழுந்தார்.
- இதனை பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
கிங்ஸ்டவுன்:
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
முன்னதாக இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் மழை அவ்வப்போது வந்து ஆப்கானிஸ்தானுக்கு சோதனை கொடுத்தது. குறிப்பாக 12-வது ஓவர் வீசிக் கொண்டிருக்கும்போது மழை வருவது போல் தெரிந்தது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி வங்காளதேசத்தை விட ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. அதன் காரணமாக பெவிலியனில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட், எதையாவது செய்து போட்டியை கொஞ்சம் மெதுவாக்குங்கள் என்று சைகையில் ஆலோசனை வழங்கினார்.
அதை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு பார்த்த ஆப்கானிஸ்தான் வீரர் குல்பாடின் நைப் உடனடியாக தம்முடைய தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு காயமடைந்தது போல் அப்படியே மைதானத்தில் விழுந்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி மருத்துவ குழுவினர் அவரை சோதித்ததால் சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது.
அதனை தொடர்ந்து அடுத்த ஒரு ஓவர் இடைவெளியில் மீண்டும் களத்திற்கு வந்து 2 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். மேலும் வெற்றியை கொண்டாட குல்பாடின் நைப் முதல் ஆளாக ஓடி வந்தார்.
குல்பாடின் நைபின் இந்த செயலை பலரும் கிண்டல் செய்து வந்த நிலையில், அந்த அணியின் வீரரான நவீன் உல் ஹக் இன்ஸ்டாகிராமில் கிண்டாலாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதில் மன்னிக்கவும் நைப், ஆனால் இதை பதிவிட வேண்டியிருந்தது. அந்த வீடியோவில் போட்டியின் போது நைப் காயத்துடன் இருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெரும் போது சிரித்தபடி வேகமாக ஓடியதும் இதனை ஐசிசி பின் தொடர்ந்து வருவது போலவும் இருந்தது. இந்த வீடியோ பதிவுக்கு அந்த அணியின் வீரர்கள் பலர் சிரித்தபடி கமெண்ட் செய்துள்ளனர்.
முக்கியமாக நைப், நண்பரே எனக்கு உடம்பு சரியில்லை. தசைப்பிடிப்பு என அந்த பதிவுக்கு ரிப்ளை கொடுத்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.