கிரிக்கெட் (Cricket)

டி.என்.பி.எல். போட்டியில் வெளியேற்றுதல் ஆட்டம்: நெல்லை-மதுரை அணிகள் இன்று பலப்பரீட்சை

Published On 2023-07-08 10:15 GMT   |   Update On 2023-07-08 10:15 GMT
  • வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) இன்று இரவு 7.15 மணிக்கு சேலத்தில் நடக்கிறது.
  • மதுரை அணி நெல்லைக்கு பதிலடி கொடுத்து குவாலிபயர்-2 ஆட்டத்துக்கு தகுதி பெறும் வேட்கையில் உள்ளது.

சேலம்:

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 12-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் லீக் ஆட்டங்கள் 5-ந் தேதியுடன் முடிவடைந்தது.

லீக் முடிவில் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

ஒருநாள் ஓய்வுக்கு பிறகு பிளே ஆப் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது. சேலத்தில் நடந்த முதல் தகுதி சுற்றில் (குவாலிபயர்-1) கோவை கிங்ஸ் அணி 30 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) இன்று இரவு 7.15 மணிக்கு சேலத்தில் நடக்கிறது. இதில் அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்-ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிபயர்-2 ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சுடன் மோதும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.இதனால் இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும்.

நெல்லை ராயல் கிங்ஸ் லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். நெல்லை அணி லீக் சுற்றில் 5-ல் வெற்றி பெற்றது. 2 ஆட்டத்தில் தோற்று இருந்தது.

மதுரை அணி நெல்லைக்கு பதிலடி கொடுத்து குவாலிபயர்-2 ஆட்டத்துக்கு தகுதி பெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 4 போட்டியில் வெற்றி பெற்றது. 3 ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News